ஒண்டி வீரனின் நினைவு தினம். வரும் 20- ஆம் தேதி அவரது தபால் தலை வெளியீடு
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளையொட்டி தபால்தலை வெளியிடப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் முருகன் தகவல்
சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 20- ந்தேதி நெல்லையில் அவரது தபால் தலை வெளியிடப்படுகிறது என்றும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. போதைப் பொருள் விற்பனையை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என நெல்லையில் மத்திய மீன்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 20- ந்தேதி மாலை அணிவித்து மரியாதை செய்ய மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் வருகை தர உள்ளனர். அதனை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மத்திய அரசு சார்பில் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக வருகை தந்த மத்திய மீன்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறுகையில் -
இன்று பாரத தேசம் முழுவதும் இந்தியாவின் 75 வது சுதந்திர தின திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நாளை முதல் வரும் 15-ஆம் தேதி வரை ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசபக்தி உள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் அதன் ஒரு பகுதியாக ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட ஒண்டி வீரனின் நினைவாக அவரது தபால் தலை வரும் 20- தேதி நெல்லையில் வெளியிடப்படுகிறது.
நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் இந்தியா உலகத்திற்கே வழிகாட்டும் தேசமாக இருக்கும் அதற்காக நாட்டு மக்கள் அனைவரும் உழைக்க வேண்டும். மத்திய அரசு மிக தீவிரமாக அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசபக்தி நிறைந்த ரஜினிகாந்தை போல மற்ற நடிகர்களும் முகநூல் முகப்பில் தேசிய கொடியை வைக்க வேண்டும். போதைப் பொருள் விற்பனையே தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழக அரசு போதை பொருள் விற்பனை தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட எதையும் நிறைவேற்றவில்லை. மகளிர்க்கு ரூபாய் ஆயிரம் என திமுக அறிவித்தது என்னாச்சு என்பது கேள்விக்குறியாக உள்ளது. கூட்டணியில் மற்ற கட்சிகளை சேர்ப்பது குறித்து தேர்தல் நேரத்தில் அகில இந்திய தலைமை முடிவு செய்யும்..மேலும் 75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் தூர்தர்ஷனில் 75 பகுதிகளாக வரும் 15- ந்தேதி முதல் ஒளிபரப்பப்படுகிறது, அதற்கான பணிகளும் நடந்து வருகிறது என தெரிவித்தார். இதில், போது தமிழக சட்டமன்ற பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன், எம்.எல்.ஏ, மாவட்ட தலைவர் தயாசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.