நீலகிரி: பர்ன்புட் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற பண்பாட்டு மக்கள் தொடர்பகம் வலியுறுத்தல்

பண்பாட்டு மக்கள் தொடர்பகம் சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு.;

Update: 2021-08-08 11:57 GMT

பேட்டி - திருநாவுகரசு ( ஒருங்கிணைப்பாளர் பண்பாட்டு மக்கள் தொடர்பகம்)

நீலகிரி மாவட்டம் தலையாட்டு மந்து பகுதியில் இருக்கும் பர்ன் புட் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பண்பாட்டு மக்கள் தொடர்பகம் தலைமைச் செயலாளருக்கு புகார் மனு அனுப்பி உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமைச் செயலாளர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட தலையாட்டு மந்து பகுதியில் இருக்கும் பன்புட் என்ற ஏரி ஆங்கிலேயர் காலத்திலிருந்து நூற்றாண்டு காலமாக இருந்து வந்துள்ளது. இந்த ஏரியானது தொட்டபெட்டா மற்றும் வேல்வியூ மலைகளின் இடையே அமைந்திருந்ததால் எந்த நேரமும் தண்ணீருடன் காட்சி அளித்துள்ளது. காலப்போக்கில் குறைவான மழை பருவம் தவறி பெய்யும் மழை மண்சரிவு உள்ளிட்டவை காரணமாக ஏரியின் அளவு குறைந்து கொண்டே சென்றுள்ளது. கடைசியாக 1963ல் ஏற்பட்ட பெருமழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு இந்த ஏரி முற்றிலும் மண்ணால் மூடப்பட்டதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து இந்த ஏரி ஒரு சிலரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகிவிட்டதாக கூறி "பண்பாட்டு மக்கள் தொடர்பகம் இயக்கம்" சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனி நபர் சிலர் பன்புட் ஏரி முழுவதுமாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதுடன் இங்கிருந்து சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் எடுத்து அதனை விற்பனை செய்து தினந்தோறும் பல லட்ச ரூபாய் வருவாய் ஈட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நெல்லையில் பண்பாட்டு மக்கள் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் மீது தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை பின்பற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விரைவில் ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்ற உத்தரவை மீறியதாக கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் 28 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 1000 பேருக்கு மேல் இணை நோய் ஏதும் இல்லாமல் இருந்த போதிலும் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் நிலையில் 100% மலைவாழ் மக்களுக்கு கொரனா தடுப்பூசி செலுத்திய மாவட்டம் எனவும் போலியாக அறிவித்ததோடு அதனை அரசிடம் தெரிவித்து கெளரவ பாராட்டு சான்றிதழ் பெற்ற மாவட்ட ஆட்சியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News