நெல்லை-அரசு பேருந்துகள் பராமரிப்பு பணிகள் தீவிரம்
ஊரடங்கு தளர்வு-நெல்லை மாவட்ட பணிமனைகளில் பேருந்துகளை இயக்க பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
ஊரடங்கு தளர்வு உத்தரவை முன்னிட்டு நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை அரசு பணிமனைகளில் பேருந்துகளில் கிருமி நாசினி தெளித்து பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு நாளை முதல் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உட்பட 23 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 17 பேருந்து பணிமனைகளில் இருந்து 955 பேருந்துகள் இயக்க தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்து பணிமனைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளின் இருக்கைகள், படிக்கட்டுகள், என பேருந்தின் முழு பகுதியும் தண்ணீரை வைத்து துடைத்து விட்டு, பின்னர் கிருமி நாசினி தெளித்து முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் இருந்து மட்டும் 60 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. நாளை இயக்கப்பட உள்ள பேருந்துகளில் 50 சதவீதம் பயணிகள் அனுமதிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. என மாவட்ட போக்குவரத்து கழகத்தில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.