நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இணைய வழியில் மகாகவி பாரதியின் உரையரங்கம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றலைத் தருவது பாரதியின் கவிதைகளே. மன வலிமையை பெற பாரதியின் பாடல்களைப் படிப்போம் எனக் குறிப்பிட்டார்.;
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் "இளைய தலைமுறையினரின் பார்வையில் மகாகவி பாரதி" உரையரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு தொடர் நிகழ்ச்சியாக, பொதிகைத் தமிழ்ச் சங்கம், நெல்லை அரசு அருங்காட்சியத்தோடு இணைந்து கடந்த மே மாதம் முதல் வாரந்தோறும் உரையரங்கம் என்ற நிகழ்ச்சியை "இளையதலைமுறையினர் பார்வையில் மகாகவி பாரதி" என்ற தலைப்பில் நடத்திவருகிறது. இணையவழியில் நடக்கும் நிகழ்ச்சியின் 11 -ஆவது வார சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை தமிழிசை நடனக் கலைஞர் தமிழ் நாடு அரசின் வளர்ச்சிக் கொள்கை குழு உறுப்பினர் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில், பள்ளிப் பருவத்தில் பாலின குழப்பத்தில் நானிருந்தபோது, என்னை எனக்கு உணர வைத்தது பாரதியின் கவிதைகள்தான். கவிதையால் மனிதத்தைப் படைத்தவன் பாரதி. எனது ஒவ்வொரு வெற்றிக்கும் பாரதியின் பாடல்களே காரணமாகும்.
பாரதியின் கவிதை இளமை மாறாதது. அதுபோல, பாரதியின் கவிதைகளை படிப்பவர்கள், நூறு ஆண்டுகள் ஆனாலும் இளமையோடு இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றலைத் தருவது பாரதியின் கவிதைகளே. மன வலிமையை பெற பாரதியின் பாடல்களைப் படிப்போம் எனக் குறிப்பிட்டார்.
நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி நன்றி கூறினார். வாழ்க நிரந்தரம் என்ற நர்த்தகி நடராஜின் நடனத்தோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.