சாக்கடை திருவிழா பெயரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
தியாகராஜநகரில் கழிவுநீர் பிரச்னைக்கு செவி சாய்க்காத மாநகராட்சியை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை தியாகராஜ நகர் வடக்கு தெரு, 12வது தெற்கு தெரு, 15வது தெற்கு தெரு ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சார்பில் உரிய கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுக்காததால் வீடுகள் மற்றும் கடைகளில் சேரும் கழிவு நீர் சாலை ஓரம் சுகாதார சீர்கேட்டுடன் ஓடுகிறது.
மேலும் இந்த கழிவுநீர் அங்குள்ள ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் வடிந்து ஓடுவதால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமப்படுகின்றனர். இப்பிரச்சினையை சரி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் சார்பில் பலமுறை மாநகராட்சியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பொதுமக்களின் புகாருக்கு செவி சாய்க்காத மாநகராட்சி நிர்வாகத்துக்கு பாடம் புகட்டும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று நூதன முறையில் சாக்கடை திருவிழா என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாகவே சாக்கடை பிரச்சினையை திருவிழாவாக நடத்துவது தொடர்பாக நோட்டீஸ் அடித்து பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. திட்டமிட்டபடி ரயில்வே பாலத்தின் அருகில் சாக்கடை திருவிழா என்ற பெயரில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஓட விடாதே, ஓட விடாதே சாலைகளில் கழிவுநீரை விடாதே பரபரப்பாதே நோய்த் தொற்றைப் பரப்பாதே என்று மாநகராட்சிக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். அப்போது அங்கு வந்த மாநகராட்சி அதிகாரி ஒருவர் விரைவில் இப்பிரச்னையை சரிசெய்வதாக உறுதி அளித்தார்.
மேலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் தகவலை அறிந்து ரயில்வே பாலத்துக்கு கீழ் கழிவுநீர் வராதபடி மணலைக் கொண்டு தற்காலிக நடவடிக்கை எடுத்திருந்தனர். வழக்கம் போல் இல்லாமல் நூதன முறையில் மக்கள் பிரச்சனையை திருவிழாவாக நடத்துவது போன்று நோட்டீஸ் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது.