அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின புகைப்படக் காண்காட்சி: ஆட்சியர் திறப்பு
சுதந்திரத்தின் மாண்புகளை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வேண்டுகோள்.
மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள விளம்பரத் துறையும், நெல்லை அரசு அருங்காட்சியகமும் இணைந்து நடத்திய 75-ஆவது சுதந்திர நாள் சிறப்புப் புகைப்படக் காண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் வி.விஷ்ணு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி வரவேற்புரை வழங்கினார்.
புகைப்படக் கண்காட்சி தொடர்பாக நடந்த தேசப் பக்திப் பாடல் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற மாணவன் முகேஷ் குமாருக்கு ரூபாய் 3000- ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இரண்டாம் பரிசு நினாசரன் என்பவருக்கும், மூன்றாம் பரிசு சங்கீதா என்பவருக்கும், முறையே ரூபாய் 2000 மற்றும் ரூபாய் 1000மும் பாராட்டுச் சான்றுகளையும் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் உரையாற்றுகையில்:-
75-ஆவது சுதந்திர நாள் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. நமக்கு சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட தலைவர்களை இளையதலைமுறையினர் நினைத்துப் போற்ற வேண்டும். எளிதாக கிடைக்கவில்லை இந்த சுதந்திரம். பல இன்னல்களுக்கிடையே பெற்ற சுதந்திரத்தை நாம் பேணிக்காக்க வேண்டும்.
சுதந்திரத்தின் மாண்புகளை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு இந்த உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தீ நுண்மியை ஒழித்திட மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வி.விஷ்ணு தெரிவித்தார்.
நிறைவாக மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் போஸ்வெல் ஆசீர் நன்றி கூறினார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பே.இராஜேந்திரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தேசபக்திப் பாடல் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்பு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.