பணிச்சுமையால் நெல்லையில் சிறப்பு உதவி ஆய்வாளர் விஷம் அருந்தி தற்கொலை
நெல்லையில் சிறப்பு உதவி ஆய்வாளர் விஷம் அருந்தி தற்கொலை செய்ததற்கு பணிச்சுமை காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஹை-ரோடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பழனி. இவரை ஆய்வாளர் மீகா ஒருமையில் பேசியதாகவும், இவருக்கு அதிகமாக பணிச்சுமை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த பழனி நேற்று இரவு திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மிகவும் ஆபத்தான நிலையில் அவரை நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.