நெல்லை தாமிரபரணி ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுப்பு
நெல்லை தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலையை பொதுமக்கள் அருகில் உள்ள கோயிலில் பூஜை செய்து வழிபட்டனர்.
நெல்லை வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் பேராட்சி செல்வி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் அருகில் ஆற்றில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் குளிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம்போல் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீருக்கு அடியில் பெரிய பாறை போன்று காலில் மிதிபடுவதை அறிந்து பொதுமக்கள் அதை வெளியே எடுத்து பார்த்தனர். சுமார் மூன்றரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலை என்பது தெரியவந்தது. திடீரென ஆற்றில் இருந்து சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து அங்கிருந்த திரிசூலி மாரியம்மன் கோயிலில் சிலையை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் கோயிலில் வைத்து அம்மன் சாமி சிலைக்கு பூசாரி முருகன் பூஜைகள் செய்தார். பொதுமக்கள் அம்மன் சிலையை ஆச்சரியமுடன் பார்த்து வழிபாடு செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.