கோவில் விழாவிற்கு பேனர் வைக்க அனுமதி மறுப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
வண்ணார்பேட்டையில் பேராட்சி அம்மன் கோவில் கொடை விழாவில் சமுதாய பேனர் வைக்க போலீசார் அனுமதி மறுத்ததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை, வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரையில் அருள்மிகு ஸ்ரீ பேராட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் கொடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேவேந்திர குல சமுதாய மக்கள் சார்பில் நாளை கொடை விழா நடைபெற உள்ளது.
இதனையொட்டி வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரிலுள்ள தேவேந்திர குல மக்கள் சார்பில் அம்பேத்கர், வீரர் சுந்தரலிங்கனார், தியாகி இமானுவேல் சேகரன் உள்ளிட்ட தலைவர்கள் படங்கள் அடங்கிய பதாகைகளை கோவில் அருகே வைத்துள்ளனர்.
இதனை அறிந்த காவல்துறையினர் கோவில் அருகில் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி அளிக்க முடியாது. எனவே உடனடியாக அகற்றும்படியும், இல்லையென்றால் காவல்துறையே அகற்றும் என்று கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் பெண்கள், ஆண்கள் என ஒன்று திரண்டு ஏராளமானோர் மதுரை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் மதுரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
சாலை மறியலால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. உடனடியாக காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அப்பகுதி மக்கள் பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு அனுமதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கோரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த திமுக பிரமுகர் பிரபு காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், பேனர் வைப்பதற்கு அனுமதி அளித்ததோடு அதை காவல்துறை அறிவுறுத்தலின்படி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.