தேச ஒற்றுமையை வலியுறுத்தி சிஆர்பிஎப் சார்பில் சைக்கிள் பேரணி
தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்காட் வரை செல்லும் சிஆர்பிஎப் சைக்கிள் பேரணியை கலெக்டர் வழியனுப்பி வைத்தார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டும், மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டும் தேச ஒற்றுமையை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ் (பிட் இந்தியா) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி ராஜ்காட் வரை சுமார் 2800 கி .மீ தூரம் சைக்கிளில் பேரணியாக செல்கின்றனர். கன்னியாகுமரியில் நேற்று இந்த சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டது. இதில் 15 வீரர்கள் மற்றும் ஐந்து மாற்று வீரர்கள் என மொத்தம் 20 பேர் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
நேற்று மாலை நெல்லை வந்தடைந்த வீரர்களை, மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் வரவேற்றார் . தொடர்ந்து அவர்களை நெல்லையிலிருந்து வழியனுப்பும் நிகழ்ச்சி, பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சைக்கிள் பேரணி செல்லும் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். பின்னர் வீரர்களை மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தார். மேலும் வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் நெல்லையை சேர்ந்த சைக்கிள் ஆர்வலர்கள் மற்றும் சிறுவர்கள் அவர்களுடன் சில கிமீ தூரம் சென்றனர்.