கழிவு நீர் அடைப்பை சரி செய்ய தானே களத்தில் இறங்கிய கவுன்சிலர்
நெல்லையில் கழிவு நீர் அடைப்பை சரி செய்ய கவுன்சிலர் தானே களத்தில் இறங்கியதால் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
tirunelveli news today நெல்லை மாநகர 4 மண்டலத்தில் 55 வார்டுகள் உள்ளது. இதில் பாளையங்கோட்டை, சமாதானபுரம், மனகாவலம்பிள்ளை நகர் பகுதியில் நான்கு வார்டுகளில் உள்ள கழிவு நீர் ஓடைகள் இங்குள்ள பெரிய ஓடையில் இணைந்து, மணிக்கூண்டு வழியே வெட்டான்குளம் பகுதியில் கலந்துவிடும்.
ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த கழிவு நீர் ஓடையில் சேரும் பாலித்தீன் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அதிகமான துர்நாற்றமும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அடைப்புகளை சரி செய்ய இப்பகுதி மக்கள் நாங்கள் பலமுறை முயற்சி செய்தும் மாநகராட்சி அதிகாரிகள் இதற்கான துப்புரவு பணியாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை எனக்கூறி அடைப்புகளை சரி செய்யவில்லை என அப்பகுதி என்கின்றனர்.
tirunelveli latest news
இந்நிலையில் நெல்லை மாநகராட்சியின் 55 வார்டுகளில் 7வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆன இந்திராணி, தனது பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் சரியான நடவடிக்கை எடுக்காததால், இன்று மம்பட்டியுடன், தானே கழிவு நீர் ஓடையில் இறங்கினார். மாநகராட்சி ஊழியர்கள் அன்றி மாநகராட்சி கவுன்சிலரே, மக்களுக்காக சுத்தம் செய்யும் பணியை தொடங்கியதும் தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 பேர் உடனடியாக கழிவு நீரோடையை இறங்கி சுத்தம் செய்யும் பணியை தொடங்கினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது - தற்காலிகமாக கண்துடைப்புக்காக மட்டுமே மாநகராட்சி ஊழியர்கள் ஓடைகளை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி செய்கின்றனர். இந்த பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளைக் களைவதற்கு மாநகராட்சி சார்பில் எப்போதும் ஒரு சில எண்ணிக்கையில் பணியாளர்கள் இருந்தால் சுகாதார சீர்கேடு என்பது ஏற்படாது என்கின்றனர்.
மக்களுக்கான பணியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், மக்களின் அடிப்படை பிரச்சனைகளை புரிந்து கொண்டு களத்தில் இறங்கும்போது, மக்கள் அனைவரையும் ஈர்க்கிறது. இதுபோன்று மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு பகுதியிலும் களம் இறங்கினால் விரைவில் மாநகராட்சி முழுமையாக சுத்தம் அடையும் என்கின்றனர்.