கொரானா பாதிப்பு: நெல்லையில் பிரபல ஜவுளிக்கடை மூடப்பட்டது

Update: 2021-04-12 14:34 GMT

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுதும் 138 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து நாள்தோறும் சராசரியாக 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் நெல்லையில் பிரபல ஜவுளிக்கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரனா உறுதி செய்யப்பட்டதால் அந்த கடை இன்று ஒரு நாள் மட்டும் மூடப்பட்டது. அதாவது நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரபலமான ஆர்எம்கேவி ஜவுளிக் கடை இயங்கி வருகிறது, இங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்த நிலையில் இன்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் இன்று ஒரு நாள் மட்டும் கடையை மூடி சுத்தம் செய்யும்படி ஆர்எம்கேவி ஜவுளிக் கடை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில் ஜவுளி கடை மூடப்பட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்த பிறகு நாளை முதல் மீண்டும் ஜவுளிக்கடை வழக்கம்போல் இயங்கலாம் என்றும் நாளை கடையை அடைப்பதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News