ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் கருப்புக் கொடி போராட்டம்

தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் கருப்புக் கொடி கட்டி காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-06-18 09:04 GMT

தமிழக ஆளுனர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் காங்கிரசார் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு ஆளுநர் ரவி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அதன்படி தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் ரவி கலந்து கொள்கிறார். தூத்துக்குடியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சாலை மார்க்கமாக நெல்லை வரும் ஆளுநர் வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்துகிறார். பின்னர் அங்கிருந்து நேராக சாலை மார்க்கமாக தென்காசி செல்ல இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணையை கண்டிக்கும் வகையில், நெல்லை மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தின் மாடியில் காங்கிரஸ் தலைவர் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

மாநகர காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தகவலறிந்து பாளையங்கோட்டை காவல் துறையினர் விரைந்து சென்று காங்கிரசாரை சமாதானப்படுத்தி கருப்புக் கொடிகளை அங்கிருந்து அகற்றினர். இதையொட்டி காங்கிரஸ் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆளுநர் உணவருந்த செல்லும் அரசு விருந்தினர் மாளிகைக்கு மிக அருகில் தான் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அமைந்துள்ளது. எனவே ஆளுநர் வந்த நேரத்தில் காங்கிரசார் நடத்திய இந்த கருப்புக் கொடி போராட்டத்தால் ஆளுநர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

Similar News