ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக - திமுக ஆதரவாளர்கள் இடையே மோதல்
அதிமுக மற்றும் திமுக ஆதரவாளர்கள் இடையே அடிதடி மோதல்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று வேட்புமனு வாபஸ் மற்றும் சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெற்றது. பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆதரவாளர்கள் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் இரண்டு கட்சியினரையும் பிரித்து வெளியே அனுப்பினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2069 பதவிகளுக்கு நடைபெறுகிறது. கடந்த 15 ம் தேதி தொடங்கி 22 ம் தேதி வரை 6,871 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெறும் நாள். மூன்று மணிக்கு பிறகு இறுதியாக தயாரான வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி குலுக்கல் முறையில் நடைபெற்றது.
இந்த நிலையில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏழாவது வார்டான மேலபுத்தநேரியில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் உட்பட 8 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் திமுக வேட்பாளர் பகவதிக்கு ஆதரவாக அதிமுக, நாம் தமிழர் கட்சி தவிர சுயேட்சை வேட்பாளர்கள் என 6 பேர் வாபஸ் பெற்று விட்டனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் நாகமணி மற்றும் அதிமுக வசம் பாதுகாப்பில் இருந்தார் என சொல்லப்படுகிறது. 3 மணிக்கு வாபஸ் பெறும் நேரம் முடிவடைந்ததும் அவர் அழைத்து வரப்பட்டார். அன்னபோஸ்ட்டில் திமுக சார்பில் போட்டியிடும் பகவதியை வெற்றி பெற வைக்க அவரது ஆதரவாளர்கள் எடுத்த முயற்சி அதிமுகவினர் பாதுகாப்பாக மறைத்து வைத்த சுயேச்சை வேட்பாளர் நாகமணியால் அன்னபோஸ்ட் என அறிவிக்க முடியாத படி ஆனது. இதனைத் தொடர்ந்து சின்னம் பெறுவதற்கு நாகமணி மற்றும் பகவதி வரும்போது திமுக மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். உடனடியாக இதை அறிந்த காவல்துறையினர் இரண்டு கட்சியை சார்ந்தவர்களையும் விலக்கி வெளியே அனுப்பினர்.