நெல்லையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவக்கி வைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமினை ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. அதனடிப்படையில், தமிழகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என மொத்தம் 35.46 இலட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாக உள்ளனர். இதில், 9.78 இலட்சம் பேர் முன்களப் பணியாளர்கள், 5.65 இலட்சம் பேர் சுகாதாரப் பணியாளர்கள், 20.03 இலட்சம் பேர் இணை நோயாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்துள்ளார்.
அப்போது அவர் கூறுகயைில் மாவட்டத்தில் 16,800 பேர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியானவர்களாவார்கள். இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினை இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி பெற்று 273 நாட்கள் அல்லது 9 மாதங்கள் கடந்தவர்கள் செலுத்திக் கொள்ளலாம். முதல் இரண்டு தவணைகளில் எந்தவகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதேவகையான தடுப்பூசியே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தப்படும். இதில், 5378 சுகாதாரப் பணியாளர்களும், 3,811 முன்களப் பணியாளர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 7,611 பேர்களும் என மொத்தம் 16,800 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.
மேலும், இம்மாவட்டத்தில் நாளது தேதி வரை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,40,950 (78.73 சதவிகிதம்) பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 6,49,904 (49.15 சதவிகிதம்) பேர் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். மேலும், 15 முதல் 18 வயது வரை உள்ள 76,400 சிறார்களில் 55,451 (72.8 சதவிகிதம்) பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு கோவின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யாமலும் நேரடியாக தடுப்பூசி மையத்திற்கே சென்றும் மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்திய போது பயன்படுத்தி அடையாள அட்டை அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கொண்டு செல்வது அவசியமாகும். ஆகையால், பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) கிருஷ்ணலீலா, மாநகர் நல அலுவலர் ராஜேந்திரன், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.