பாளை சிவன் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தெப்ப உற்சவம்

பாளை சிவன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 100 ஆண்டுகளுக்கு பின் தெப்பத் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-04-18 02:12 GMT

பாளை சிவன்  கோவிலில் நூறு ஆண்டுகளுக்கு பின் தெப்ப உற்சவம் நடந்தது.

தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுள் ஒன்று நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுராந்தீசுவரர் சமதே கோமதியம்பாள் திருக்கோவிலாகும். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை பிரம்மோற்சவ பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடக்கும் உற்சவ காலங்களில் தினசாி காலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும்.‌ இரவில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்று வந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 11- ம் நாள் திருவிழாவில் தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு கோவிலில் இருந்து வீதி உலாவாக வந்து தெப்பத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சுவாமி அம்பாள் 11 முறை தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இக்கோவிலின் தெப்பம் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் இல்லாமல் கடந்த 100 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடைபெறாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு , குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தெப்பம் புனரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூறு ஆண்டுகளுக்கு பின்பு  தெப்பத்திருவிழா நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News