நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் :பூமி பூஜை செய்து சபாநாயகர் தொடக்கம்
மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடத்துக்கான பூமி பூஜையினை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்;
நெல்லை மாநகர பகுதியில் புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையங்களில் மாநகராட்சிக்கான சட்டத்தை பின்பற்றியே கடைகளின் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர பகுதியில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒன்பது நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் 9.92 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்ட அரசு ஆணை வழங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு 1.51 கோடி மதிப்பில் 84 பேட்டரி வாகனங்களை வழங்கினார். பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பெற்று வேகமாக அதிகரித்து வந்தாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு கவனமாக செயல்பட்டு தடுப்பூசிகளை வேகமாக செலுத்தி வருகிறது. நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை முதல் தவணையாக 82 சதவீதம் பேரும், இரண்டாம் தவணையாக சுமார் 52 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதே போல் 15 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சுமார் 77 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம், ஒன்பது ஆரம்ப சுகாதார நிலையங்களில் 9 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குப்பை அள்ளுவதற்கு 297 பேட்டரி வாகனங்கள் வழங்கபட்ட நிலையில் இன்று கூடுதலாக 84 வாகனங்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .
ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தனிச்சட்டம் உள்ளது. அதன்படியே ஒவ்வொரு கடைகளும் என்னென்ன விலைகளுக்கு கொடுக்க வேண்டும் என நிர்ணயிக்கபட்டுள்ளது. அதை பின்பற்றி தான் கடைகள் கொடுக்கப்படுகிறது. அதிகாரிகள் யாரும் எந்த தவறும் செய்யவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரையோ, மாநகராட்சி ஆணையரையோ தொடர்பு கொண்டால் தேவையான உதவி செய்யப்படும் என்று அப்பாவு தெரிவித்தார்.