கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நெகிழிக்கு பதிலாக துணிப் பை இலவசமாக வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
நெகிழி இல்லா எதிர்காலத்தை அமைத்திடும் நோக்கில் நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு 10 ஆயிரம் துணிப்பைகளை வழங்கினார். பொது வேலைநிறுத்தம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் 44 சதவீதம் பேருந்துகள் இயங்குகிறது, மக்களுக்கு பதிப்பு இல்லாத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெகிழி இல்லா எதிகாலத்தை அமைத்திடவும் , சுற்றுச்சூழல் மாசுபடாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் மீண்டும் மஞ்சள் பை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்கள், மாணவ- மாணவிகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லையில் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நெகிழிக்கு பதிலாக துணிப் பை இலவசமாக வழங்கும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு துணிப்பையை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஆட்சியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெகிழி இல்லா நெல்லையை உருவாக்கும் வகையில் குறிப்பாக பள்ளிக்கூடங்கள் கல்லூரிகளில் பிளாஸ்டிக்கை எப்படி ஒழிக்க முடியும் என்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் என்னென்ன உள்ளது; அதற்காக மாற்றுப் பொருட்கள் என்ன உள்ளது என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்படுகிறது. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பனை ஒலை பயன்பாடு குறித்தும் மாணவர்கள், பொதுமக்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் எடுத்து வருகிறது.
நெல்லையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு மேலாக புத்தக விற்பனை நடைபெற்றுள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த புத்தக கண்காட்சியை 3.5 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளனர். நெல்லை மட்டுமல்லாமல் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து பார்த்து சென்றுள்ளனர் என தெரிவித்தார்.
இன்று நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஆட்சியர், வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து அரசு அறிவுறுத்தலின்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 365 பேருந்துகளில் தற்போது உள்ள நிலவரப்படி 161 பேருந்துகள் இயங்குகிறது, 44 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் விரைவில் முழுமையான அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.