தேசிய மாணவர் படையின் 5வது பட்டாலியன் பிரிவினருக்கு வருடாந்திர பயிற்சி முகாம்
நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் தேசிய மாணவர் படைப்பிரிவைச் சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தேசிய மாணவர் படையில் ( என்சிசி) பங்கேற்றுள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வருடாந்திர பயிற்சி முகாம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 5-வது பட்டாலியனை சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த பயிற்சி முகாமில் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் தேசிய மாணவர் படைப்பிரிவைச் சேர்ந்த 250 மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்ளனர். முதல்நாள் உடற்பயிற்சி , கவாத்து பயிற்சி உள்ளிட்டவைகள் நடைபெற்றது.
இரண்டாம் நாளான இன்று துப்பாக்கியின் வகை அறிதல், அதன் இயக்கம் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு லெப்டினன்கானல் நிதிஷ் குமார் மேற்பார்வையில் மாணவ- மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு துப்பாக்கி பயிற்சியை மேற்கொண்டனர். ஒவ்வொரு மாணவ- மாணவிகளுக்கும் தலா ஐந்து குண்டுகள் வழங்கப்பட்டு குறிப்பிட்ட இலக்கை தாக்குவதற்கு ஐந்து முறை வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த பயிற்ச்சியை தொடர்ந்து ஆயுதங்கள் கையாள்வது குறித்தும், அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் ஐந்து நாட்கள் நடக்கிறது .
தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் முகாமில் பங்கேற்ற மாணவிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என பரிசோதித்த பிறகே முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இந்த பயிற்சி முகாமை அடுத்து பி சான்றிதழுக்கான தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கிறது.