நெல்லை என்ஜிஓ காலனியில் அதிமுக சார்பில் நீர் மாேர் பந்தல் திறப்பு
என்ஜிஓ காலனி பகுதியில் பொதுமக்கள் தாகத்தைத் தீர்ப்பதற்காக அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.
நெல்லையில் சுட்டெரிக்கும் வெயிலில் செல்லும் மக்களுக்கு தாகத்தைத் தீர்க்க அதிமுகவினர் மோர், குளிர்பானங்கள், இளநீர், திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், தர்பூசணி, வாழைப்பழம் வழங்கினர்.
நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடை காலம் என்பதால் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாநகரில் அதிகபட்சம் 100.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதால் வெப்பம் தாழ முடியாமல் மக்கள் சாலைகளில் செல்ல கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் நீர் மோர் பந்தல் அனைத்து மக்களின் தாகத்தை தீர்த்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று மேலப்பாளையம் கிழக்கு பகுதி அதிமுக செயலாளர் சண்முககுமார் ஏற்பாட்டில் என்.ஜி.ஓ. காலனி ஆர்டிஓ அலுவலகம் அருகே பொதுமக்களுக்கு அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை- கணேசராஜா திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்களின் தாகத்தை தீர்க்க இலவசமாக மோர், இளநீர், தர்பூசனி, ரஸ்னா, வெள்ளரிக்காய், வாழைப் பழங்கள், மாம்பழம், திராட்சை பழங்கள், ஆரஞ்சு போன்றவைகள் வழங்கப்பட்டது.
அவ்வழியாக சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிமுகவினர் வழங்கிய இளநீர், பல வகைகள், குளிர்பானங்களை ஆர்வமுடன் வாங்கி சுவைத்தனர். ஒவ்வொருவரும் தங்களது வீடுகளுக்கும் பழங்களை அள்ளிச் சென்றனர். பலர் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர்.