பேருந்து நிலைய கடைகளுக்கு ரூ.1 கோடி வரை அட்வான்ஸ்: வியாபாரிகள் போராட்டம்

பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலைய கடைகளுக்கு முன்வைப்பு தொகை, வாடகை குறைக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.

Update: 2021-11-08 09:44 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வியாபாரிகள்.

நெல்லை மாநகராட்சியில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிதாக வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இங்கு கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு முன்வைப்புத் தொகையாக குறைந்தபட்சம் 20 லட்சம் முதல், அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரையும், வாடகையாக குறைந்தபட்சம் 15 ஆயிரம் முதல், அதிகபட்சம் 25 ஆயிரம் வரையும், மாநகராட்சி கட்டணம் வசூலிக்க 2 லட்சத்து 50 ஆயிரமும் மாநகராட்சி கட்டணம் வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது மிக மிக அதிக கட்டணம் என்பதால் நாளை மறுதினம் கடைகளுக்கான ஏலம் நடைபெற உள்ள நிலையில் முன்வைப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்கும் வரை ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி வியாபாரிகள் குடும்பத்தினருடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தனியார் கட்டிடங்களில் கூட சதுர அடிக்கு 55 ரூபாய் வரைதான் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் மாநகராட்சி புதிய கடைகளுக்கு சதுர அடிக்கு 200 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

முன் வைப்பு தொகையாக 20 லட்சம் முதல், ஒரு கோடி ரூபாய் வரை நிர்ணயித்துள்ளனர். இங்கு பள்ளி- கல்லூரிகள் மட்டுமே உள்ளது. எனவே பெரிய அளவிற்கு வியாபாரம் நடக்காது. ஆனால் கார்ப்பரேட் நிர்வாணம் போன்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே முன்வைப்புத் தொகை கட்டணத்தை குறைக்கும் வரை ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம், இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக அனைத்து வியாபாரிகளையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News