தசரா திருவிழாவில் 12 அம்மன் சப்பரங்கள் அணி வகுப்பு
பாளையங்கோட்டை ராமர் கோவில் திடலில் 12 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.;
நெல்லை மாநகரில் தசரா திருவிழாவிற்கு புகழ் பெற்ற பாளையங்கோட்டை ஆயத்தம்மன் கோவில் தசராவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதே போல் பாளையங்கோட்டையில் உள்ள பேராச்சி அம்மன், தூதுவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சி மாகாளி அம்மன், விஸ்வகர்மா உச்சிமாகாளி அம்மன், வடக்கு உச்சி மாகாளி அம்மன், முப்புடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புது அம்மன் தெருவில் உள்ள உலகம்மன், புது உலகம்மன் ஆகிய அம்மன் கோவில்களிலும் கடந்த 25 ஆம் தேதி தசரா திருவிழா தொடங்கியது.
இந்த திருவிழாவின் போது அம்மன்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இரவிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீப ஆராதனையும் நடைபெற்றது.
இந்நிலையில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி வியாழக்கிழமை நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு மற்றும் 12 மணிக்கு அனைத்து அம்மன் கோவில்களிலும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.பின்னர் இரவில் 12 அம்மன் கோவில் சப்பரங்களும் பாளையங்கோட்டை முக்கிய வீதிகளில் பவனி வந்தன. இதையொட்டி இந்த வீதிகளில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. சப்பரங்கள் பவனியாக வந்த போது வீடுகளின் முன்பு மக்கள் நின்று வழிபட்டனர்
இந்நிலையில் காலையில் பாளையங்கோட்டை உள்ள ராமசாமி கோவில் திடலில் 12 சப்பரங்களும் அணிவகுத்து நின்றன. அங்கு தீபா வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளுக்கு தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து பிற்பகல் ஒரு மணிக்கு ராஜகோபாலசாமி கோவில் முன்பும், இரவு 7 மணிக்கு மார்க்கெட் பகுதியிலும் 12 சப்பரங்களும் அணிவகுத்து நின்றன. இரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு பன்னிரண்டு அம்மன்களும் அணிவகுத்து நிற்க சூரசம்காரம் நடைபெற்றது.
தசரா திருவிழாவை யொட்டி பாளையங்கோட்டை பகுதி முழுவதும் விழா கோலம் பூண்டு இருந்தது. அனைத்து பகுதிகளிலும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. பக்தர்கள் புத்தாடை அணிந்து விழாவில் கலந்து கொண்டனர். பாளையங்கோட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இருந்தும் பெரும் அளவில் பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். பல திடீர் கடைகள் அந்த பகுதியில் உருவாகி இருந்தன. பக்தர்கள் அந்த கடைகளில் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி சென்றனர். பக்தர்கள் வந்த செல்வதற்கு வசதியாக கூடுதல் பஸ்வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
இந்த விழாவின் போது அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வந்தனர்.