நெல்லை:முஸ்லிம்களின் கல்வி, வேலை வாய்ப்பு ஒதுக்கீட்டை உயர்த்த எஸ்டிபிஐ கோரிக்கை

சிறுபான்மை முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கையான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்;

Update: 2021-07-29 10:33 GMT

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை: 

தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியின் போது சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் 10.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று தற்போதைய திமுக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற வன்னியர் சமூகத்தின் கோரிக்கையை ஏற்று இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியுள்ள தமிழக அரசு, தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கி உள்ள சிறுபான்மை முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கையான 3.5% இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தித்தர முன்வர வேண்டும். மேலும், நடைமுறையில் உள்ள முஸ்லிம்களுக்கான 3.5% உள் ஒதுக்கீடு தொடர்பிலான வெள்ளை அறிக்கை மூலம் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் கல்வி வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கி உள்ள சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனினும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அதனை 5 சதவீதமாக உயர்த்தித் தரவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் உள்பட இந்தியாவில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை சூழல், வாழ்வாதரங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டியின் அறிக்கைக்கு பிறகுதான், முஸ்லிம்களின் சமூக பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு விவாதப்  பொருளானது.  சச்சார் அறிக்கைக்கு பிறகும் முஸ்லிம்களுக்கான நெருக்கடிகள் அப்படியே இருக்கின்றன.

முஸ்லிம்களின் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வி தகுதிகள் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பதாக சச்சார் அறிக்கை சுட்டிக் காட்டிய பிறகும்,  மத்திய, மாநில அரசுகளின் அதனை சரிசெய்வதற்கு  தேவையான அளவுக்கு  கவனம் செலுத்தவில்லை  என்று பேராசிரியர் அமிதாப் குண்டு தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கை சுட்டிக்காட்டியது.

மேலும், அரசு வேலைவாய்ப்புகளில், முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது என்றும், கடும் முயற்சிகளுக்கு பின்னரும் கூட, அரசு வேலை வாய்ப்பில் அவர்களின் மொத்த மக்கள் தொகையின் விகிதத்தில், பாதி பங்கை காட்டிலும் குறைவு எனவும் 

முஸ்லிம்களுக்கு சமூக-பொருளாதார வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும் சமவாய்ப்பையும், சம பங்கீட்டையும் மேம்படுத்தும் வகையில் முறையான இடஒதுக்கீடு வழங்கி குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை சரி செய்யலாம் என்ற பரிந்துரையையும் அரசுக்கு முன்வைத்தது. இடஒதுக்கீடு என்பது ஒரு சமூகத்தில் பெரிய அளவில் இருக்கும் திட்டமிட்ட பாரபட்சத்தை களைவதற்கான பல்வேறு கருவிகளில் ஒன்று என்றும் சுட்டிக்காட்டி  குண்டு கமிட்டி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. எனவே கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்துவதாக அதில் தெரிவித்துள்ளார். 


Tags:    

Similar News