ரியல் எஸ்டேட் புரோக்கர் வெட்டிக் கொலை
நெல்லை கேடிசி நகர் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் புரோகர் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இரவில் இருசக்கர வாகனத்தில் நடுவக்குறிச்சி அருகே உள்ள பானுமதி நகருக்கு சென்றுள்ளார் . அப்போது ஊரின் வெளிப்புறத்தில் அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.