தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் தீ தொண்டு நாள்
1944ம் ஆண்டு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதில், மும்பை தீயணைப்பு துறையில் 66 வீரர்கள் பலியாகினர். அவர்கள் நினைவாக இன்று இந்தியா முழுவதும் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.
நெல்லை மாவட்டம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட அலுவலக வளாகத்தில் தீ தொண்டு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. மும்பை துறைமுகத்தில் கடந்த 1944ம் ஆண்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டதில், மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்கள் அதில் பலியாகினர். இவர்கள் நினைவாக ஏப்ரல் 14ம் தேதி உயிர்நீத்த வீரர்களுக்கு இந்தியா முழுவதும் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீ தொண்டு நாளாக கடைபிடிக்கபட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீ தொண்டு நாள் கடைபிடிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து துக்கத்தை வெளிப்படுத்தினர்.
இதையொட்டி மும்பையில் பலியான 66 தீயணைப்பு வீரர்களின் நினைவாக நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் தலைமையில் தமிழக வீரர்கள் 33 போ் உட்பட வீரர்களின் நினைவு துாணில் மலர்வளையம் வைத்து, வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் அனைத்து தீயணைப்பு வீரர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பிறகு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் மீட்பு பணிக்கான ஆடைகளை மாவட்ட தீயணைப்பு அலுவலர் வழங்கினார். நிலைய அலுவலர் வீரராஜ் உட்பட தீயணைப்பு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.