நாங்குநேரி அருகே சாலை விபத்து: தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு
சந்திரயான் 3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணனை சந்தித்துவிட்டு திரும்பிய போது விபத்து நேரிட்டது;
நாங்குநேரி அருகே நள்ளிரவில்கார் கவிழ்ந்து விபத்து ஒளிப்பதிவாளர் உயிர் இழப்பு, 3 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்திரன் 3 நிலவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணனை நேரில் சந்தித்து பேட்டி எடுப்பதற்காக நெல்லையிலிருந்து செய்தியாளர் குழுவினர் நேற்று மாலை ஒரு காரில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர். திருவனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் அக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு காரில் நெல்லை நோக்கி திரும்பி வந்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் நாங்குநேரி நான்குவழி சாலையில் உள்ள தனியார் மில் அருகே வந்த போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி கேமரா மேன் சங்கர்(32) தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன்(45) நியூஸ் 7 தமிழ் கேமரா மேன் வள்ளிநாயகம்(38) மற்றொரு கேமரா மேன் நாராயணன் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற நாங்குநேரி காவல்துறையினர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சங்கரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நெல்லை செய்தியாளர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து விபத்தில் சிக்கிய சக செய்தியாளர்களுக்கு உதவி செய்தனர். செய்தி சேகரித்து பின் வீடு திரும்பும் வழியில் செய்தியாளர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் இறந்த சங்கருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த கார் விபத்து நெல்லை மாவட்ட செய்தியாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
.