கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆட்டை 'ஆட்டைய' போட்ட மர்ம நபர்கள்
களக்காடு அருகே குலதெய்வ கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆட்டை திருடிய மர்ம நபர்கள். சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை விசாரணை;
ஆடு திருடிய காட்சி
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கோவிலம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுடலைகண்ணு. பலசரக்கு கடை நடத்தி வரும் இவர் தனது குல தெய்வத்திற்கு காணிக்கை செலுத்துவதற்காக கடந்த 3 ஆண்டுகளாக கிடா ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு சுமார் 30 கிலோ எடை வரை இருக்கும்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் இவரது வீட்டு முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டை பைக்கில் வைத்து திருடி சென்று விட்டனர்.
மர்ம நபர்கள் ஆட்டை திருடிய காட்சிகள் அனைத்தும் அவரது வீட்டின் முன்பு இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. ஆடு திருடு போனது குறித்து களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சிசிடிவி வீடியோ காட்சியை வைத்து களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.