பூர்வீக சொத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி கொலை
நடுவக்குறிச்சி கிராமத்தில் பூர்வீக சொத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பட்டப் பகலில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த நடுவக்குறிச்சி முத்துராமலிங்க தெருவை சேர்ந்தவர் முத்து மாலை வயது 39. இவர் சில வருடங்களுக்கு முன்பு வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்துவிட்டு தற்போது ஊரில் நடைபெறும் பொது பிரச்சனைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
முத்து மாலையின் தாத்தா பெயரில் இருந்து வரும் பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பாக அவரின் குடும்பத்தினர் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று முத்து மாலையை நடுவக்குறிச்சி ரேஷன் கடை அருகில் வைத்து அவரது அத்தை மகனான நெல்லை திருத்து பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சித்தப்பா மகனான நடுவக்குறிச்சியை சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற நெல்லை தாலுகா காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் கொலை செய்த கையோடு சுப்ரமணியன் மற்றும் முருகன் இருவரும் நெல்லை காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறில் உறவினரை பட்டப்பகலில் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.