நான்குநேரி: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கொரோனா காலத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்.
நெல்லை மாவட்டம் நான்குநேரி தாலுகா அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நான்குநேரி தாலுகா அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முத்துலட்சுமி தலைமை வகித்தார். சிறப்பு த்துணை வட்டாட்சியர் சண்முகவேல் முன்னிலை வகித்தார்.
இதில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இறந்துபோன ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் செலவினம் மற்றும் ஊழியருக்கான மதிப்பு ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் பணியிடத்தை ஏற்படுத்தவும், மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதிதிராவிட நல தனி வட்டாட்சியர் ஐயப்பன், கலைமதி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.