கொரோனா பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்!
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில்;

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் கொரோனா பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் கொரோனா பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், அரசு மருத்துவமனைகளிலும் அதிரடி ஆய்வுகள் மேற்கொண்டார்.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், எம்.எல்.ஏ., ஆக பதவியேற்றுக்கொண்ட பிறகு முதன்முறையாக இன்று (மே 13) தனது சொந்த தொகுதியான நாங்குநேரிக்கு வருகை புரிந்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவருக்கு, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து, தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், நாங்குநேரி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை பார்வையிட்டார்.
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக தொகுதி மக்களுக்கு கபசுர குடிநீரை ஏற்கனவே வழங்கி வரும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் ஆய்வு செய்தார்.
இதையொட்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில் அமைந்துள்ள பெல்ஜியம் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அந்த மருத்துவமனையின் டாக்டர் (பொறுப்பு) சினுசா மாசிலை சந்தித்து, அந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
கொரோனா பரவலை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும், மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்கிற ஆலோசனையையும் அப்போது எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் தெரிவித்தார்.
இதேபோல், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்குறுங்குடியில் உள்ள அரசு சமுதாய நல நிலையத்திற்கும் நேரில் சென்று, அதன் கண்காணிப்பாளர் டாக்டர் பிரியதர்ஷினியை சந்தித்துப் பேசினார்.
கொரோனா தடுப்புப் பணிகளுக்கு தேவையான ஆலோசனைகளைக் கூறிய அவர், மருத்துவமனைக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகின்றன என்பதையும் கேட்டறிந்தார்.அதன்பிறகு, ஏர்வாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலத்திற்கு சென்று வட்டாட்சியர் இசக்கி பாண்டி, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயா ஆகியோரையும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., சந்தித்து, தொகுதி முழுவதும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் பரவல் தடுப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதோடு, கொரோனா பரவலைத் தடுக்க, போர்க்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.