100 வயதை கடந்த மூதாட்டிக்காக 30 மைல் சென்று உதவி தொகை வழங்கும் தபால் ஊழியர்

100 வயது மலைவாழ் மூதாட்டிக்கு உதவித் தொகை வழங்க , 30 மைல் சென்று வரும் தபால் ஊழியருக்கு பாராட்டுகள் குவிகிறது.

Update: 2021-08-11 18:17 GMT

100  வயது மூதாட்டி

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடர்ந்த வனத்தில் ஆதரவில்லாமல் தவித்த மூதாட்டிக்கு ஒரே வாரத்தில் பென்சன் வழங்கி உதவிய மாவட்ட ஆட்சியர். அந்த ஒரே ஒரு பென்சன் தொகையை வழங்குவதற்காக மாதம்தோறும் 30 கிலோ மீட்டர் தூரம் சவாலான மலை பயணம் மேற்கொள்ளும் தபால் ஊழியர் செயல் அனைவராலும் பாராட்ப்படுகிறது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அடுத்த காரையாறு அணைப் பகுதியை சுற்றிய மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆங்காங்கே காணி இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் தேவைக்காகவும், அங்குள்ள அரசு அலுவலகம் சார்ந்த விஷயங்களுக்காகவும் இப்பகுதியில் பாபநாசம் கிளை தபால் அலுவலகம் இயங்கி வருகிறது.

இங்கு காணி இன சமுதாயத்தைச் சேர்ந்த கிறிஸ்து ராஜா (55) என்பவர் தபால் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

தினந்தோறும் வழக்கமான தபால்களை பிரித்துப் பார்க்கும் கிறிஸ்து ராஜாவுக்கு அன்று ஒரு மணியார்டர் வந்திருந்தது. காரையார் அணையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் உள்ள இஞ்சிக்குழி பகுதியில் வசித்து வரும் குட்டியம்மாள் என்ற மூதாட்டியின் பென்சன் தொகைக்கான 1,000 ரூபாய் மணியார்டர் தான் அது.

பொதுவாக 58 வயதை கடந்த பெண்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் குட்டியம்மாள் தனக்கான மாத ஓய்வூதியத்தை பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

100 வயதை கடந்த குட்டியம்மாள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இஞ்சிக்குழி வனப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தாலும், அவர்களின் ஆதரவு இல்லாமல் குடில் வீட்டில் தனியாக வசிக்கிறார்.

மலைப் பயணம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமுடைய நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சில மாதங்களுக்கு முன்பு இஞ்சிக்குழி வனப்பகுதிக்கு சென்றிருந்தார்.

அரசாங்க அதிகாரி அங்கு வந்திருப்பதை அறிந்த மூதாட்டி குட்டியம்மாள் ஓடிச்சென்று மாவட்ட ஆட்சியரிடம் தான் மிகுந்த சங்கடத்தில் இருக்கிறேன். ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார்.

குட்டியம்மாளின் மன வேதனையை நன்கு புரிந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அடுத்த ஒரு வாரத்தில் அவருக்கு தமிழ்நாடு அரசின் மாத ஓய்வூதியம் 1,000 ரூபாய் வழங்க உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அதோடு மட்டுமில்லாமல் வனப்பகுதியில் வங்கி மற்றும் ஏடிஎம் வசதி இல்லாததால் தபால்துறை மூலம் குட்டியம்மாளுக்கு பென்சன் தொகை சென்று சேர வழிவகை செய்தார்.

அந்த வகையில் தான் குட்டியம்மாளின் பென்ஷனுக்கான மணியார்டர் கிறிஸ்து ராஜாவின் கையில் கிடைத்தது. மூதாட்டிக்கு உதவ மலையேறும் கிறிஸ்துராஜா அதிர்ச்சிகரமான விஷயம் என்றாலும் கூட குட்டியம்மாளுக்காக மாதம்தோறும் மலை ஏற கிறிஸ்துராஜா கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.

தானும் ஒரு காணி இன சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சவாலான மலை பயணத்தை மேற்கொண்டு மாதம்தோறும் குட்டிம்மாளுக்கு பென்சன் தொகையை கொண்டு செல்கிறார்.

இதற்காக அவர் ஒரு நாள் முழுவதும் செலவிட வேண்டியுள்ளது. எனவே அலுவலக வேலை நாட்களில் செல்ல முடியாது என்பதால் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் தனது பயணத்தை திட்டமிடுகிறார்.

வனத்துறை அதிகாரிகளும் கிறிஸ்துராஜாவுக்கு உதவியாக அவர் காரையார் அணையை கடந்து செல்ல படகு அனுப்பி உதவிகளை செய்து வருகின்றனர்.

கிறிஸ்துராஜாவின் பயணம் குட்டியம்மாளுக்கு பென்சன் வழங்க செல்லும் நாளில் கிறிஸ்து ராஜா அதிகாலையில் எழுந்து காலை, மதியம் இரண்டு வேளை உணவை கட்டிக்கொண்டு பையுடன் தனது பயணத்தை தொடங்குகிறார்.

தபால் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் காரையார் அணையை அடைந்து, அங்கிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் படகில் பயணம் மேற்கொள்கிறார்.

பின்னர் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து மிக சவாலான மலையைக் கடந்து செல்கிறார். அங்கிருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டிற்குள் நடந்து சென்று இஞ்சிக்குழியை அடைகிறார்.

கிறிஸ்து ராஜாவின் பயணம் இடையில் யானைகள், காட்டெருமைகள், கரடிகள் போன்ற ஆபத்தான விலங்குகள் எந்த நேரமும் தன்னை தாக்கலாம் என்ற அச்ச உணர்வோடு அவர் தனது பயணத்தை தொடர்கிறார்.

குட்டியம்மாளின் வேண்டுகோளுக்கு இணங்க கிறிஸ்து ராஜா தனது காணி இனத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை மாதம்தோறும் தனக்கு உதவியாக உடன் அழைத்துச் செல்கிறார்.

இருவரும் செல்லும் வழியில் அமர்ந்து உணவு அருந்துகின்றனர். விலங்குகள், பூச்சிகளின் தொந்தரவு விலங்குகளிடம் இருந்து தப்பித்தால் கூட தரையில் கிடக்கும் அட்டை பூச்சியிடமிருந்து அவர்களால் தப்ப முடியவில்லை. குட்டியம்மாளின் இடத்தை அடைவதற்குள் ஏராளமான அட்டைப் பூச்சிகள் கால்களில் ஏறி ரத்தத்தை உறிஞ்சுவதை பார்க்க முடிகிறது.

கிறிஸ்து ராஜாவை கண்டதும் மூதாட்டி குட்டியம்மாவுக்கு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. தனது பென்சன் தொகையை வாங்கிக் கொண்டு காபி தண்ணி ஏதாச்சும் குடிக்கிரியா என்று பாசத்தோடு நலம் விசாரிக்கிறார்.

ஆனால் எந்த அடிப்படை வசதியும் இல்லா பகுதியில் வாழ்ந்து வரும் குட்டியம்மாளிடம் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதில் கிறிஸ்து ராஜா உறுதியாக உள்ளார்.

மூதாட்டி குட்டியம்மாள் குறித்து தபால் ஊழியர் கிறிஸ்து ராஜா நம்மிடம் கூறுகையில்:-

குட்டியம்மாளுக்கு பென்சன் தொகை எனது மூலமாக சென்றடைவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனது அலுவலகத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் ஆபத்தான வழியில் மலைப் பயணம் மேற்கொண்டு குட்டியம்மாளை சந்திக்கிறேன்.

இதனால் எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. குட்டியம்மாவுக்கு பென்சன் வழங்க மாதந்தோறும் அவரை சந்திப்பதில் மனமகிழ்ச்சி ஏற்படுகிறது.

எனது குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். நான் பணி ஓய்வு பெறும் வரை எந்த மனக் கசப்பும் இல்லாமல் குட்டியம்மாளின் பென்சன் தொகையை கொண்டு சேர்க்க தயாராக இருக்கிறேன்.

மூதாட்டிக்கு உதவும் தபால் ஊழியர் இதுகுறித்து மூதாட்டி குட்டியம்மாள் நம்மிடம் பேசுகையில்:-

எனது தாத்தா காலத்தில் இருந்து இந்த காட்டு பகுதியில் வசித்து வருகிறோம். நான் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறேன்.

கலெக்டர் இங்கு வந்தபோது நான் அவரைப் பார்த்து ரொம்ப சங்கடத்தில் இருக்கிறேன். ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டேன். அவர் உடனே எனக்கு பென்சன் வழங்கியுள்ளார்.

அவருக்கு நல்ல பெயர் ஏற்பட வேண்டும். இந்த காட்டில் வசித்தால் தான் எனக்கு நிம்மதி. ஊருக்குள்ளே என்னால் வசிக்க முடியாது. எனக்கு தகரத்தால் வீடு கட்டி கொடுக்க அரசு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஒரு தபாலை கொண்டு சேர்க்கவே சலித்துக் கொள்ளும் தபால் ஊழியர்களுக்கு மத்தியில், ஒரே ஒரு மணியார்டருக்காக மாதம்தோறும் 30 கிலோ மீட்டர் தூரம் மலைப் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் முழுவதையும் செலவிடும் தபால் ஊழியர் கிறிஸ்து ராஜாவின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Tags:    

Similar News