நெல்லையில் நடந்த திருமண விழாவில் சசிகலா பற்றி ஓ.பி.எஸ். பரபரப்பு பேட்டி

நெல்லையில் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஓ பன்னீர் செல்வம் சசிகலா பற்றி பரபரப்பு பேட்டி அளித்தார்.

Update: 2022-05-13 10:44 GMT

நெல்லையில் நடந்த திருமண விழாவில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

நெல்லை மாவட்டம் மேலச்செவல் பகுதியில் பசும்பொன் தேசிய கழகம் துணைத்தலைவர் ஆதி சுப்ரமணியன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முன்னாள் துணை முதலமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் திருமண விழாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தேர்தலுக்கு முன் 505 வாக்குறுதிகளை தி.மு.க. மக்களுக்கு அளித்து இருந்தது. ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு பயனளிக்கும் திட்டங்களை நிறைவேற்ற வில்லை. ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்கள் வேதனையை தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். நிர்வாக சீர்கேட்டிற்கு இந்த ஓராண்டு உதாரணம். அ.தி.மு.க. பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கியது.

தி.மு.க. ஆட்சியில் தரமில்லாத பொங்கல் பொருட்களையும், பொங்கல் பரிசு தொகையும் இல்லாமல் வழங்கப்பட்டது. பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட ஆயிரம் மதிப்பூதியம் இன்னும் வழங்கப்படவில்லை.அ.தி.மு.க. ஆட்சியில் மாநிலத்தின் மொத்த நிதியில் 55 சதவீதம் பெண்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது. அடித்தட்டு மக்களும் .அனைவருக்கும் சமமாக வாழும் வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் திட்டங்கள் வகுக்கப் பட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூக நலத்திட்டங்கள் மக்களின் கைகளுக்கு நேரடியாக சென்று சேர்ந்தது. தற்போது அதுபோன்ற சூழல் இல்லை. தி.மு.க. ஆட்சியின் வேதனையாக கடந்த ஓராண்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு தானாக வந்து விடுகிறது. எப்போது மின்சாரம் வரும் எப்போது மின்சாரம் போகும் என தெரியாமல் விவசாயிகள் மிகப்பெரிய வேதனையில் உள்ளனர். பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் உள்ளனர் என்றார்.

மேலும் ஜெயலலிதா போல் நல்லாட்சியை தருவேன் என சசிகலா கூறியது குறித்து கேட்டதற்கு வந்தால் பார்ப்போம் எனவும் பதில் அளித்தார்.

Tags:    

Similar News