23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தண்டனைக்கைதி : தனிப்படை போலீசார் கைது
23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தண்டனைக் கைதியை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலைத்தில் பதிவான வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கைதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலையம் கெளதமபுரி கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் பச்சாத்து (72) என்பவர், அம்பை காவல் நிலைய (குற்ற எண் - 727/ 1992 U|S 302 ) வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். இதற்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல் முறையீடு காலத்தில் ஜாமீனில் வெளியில் இருந்து வந்தார். மேல் முறையீட்டு மனுவுக்கான தீர்ப்பில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குற்றவாளி பாச்சாத்து தலைமறைவாகி விட்டார். 1998 ஆம் ஆண்டிலிருந்து குற்றவாளி பச்சாத்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இன்று வரை நிலுவையில் இருந்து வந்தது.
இது பற்றி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது. குற்றவாளியை கைது செய்து பிடியாணையை தாமதமின்றி நிறைவேற்ற தலைமறைவான கைதியைப் பிடிக்க வேண்டுமென, அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் சந்திரமோகன்சைமன்சாம்பாகூர் மற்றும் காவல் துறையினர் சண்முகபாண்டியன், ராமர், பெருமாள், ராஜேஷ், மற்றும் மகாராஜன் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்தி தேடுதல் வேட்டையில் மேற்படி குற்றவாளி பாச்சாத்து(72) வை 29.08.2021 இன்று கைது செய்தனர். இதன் மூலம், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த பிடியாணையை நிறைவேற்றி, குற்றவாளியை முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.