சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு
சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது;
அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்கள் நலன் கருதி பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இது குறித்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பக்தர்கள் வனத்துறை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, நான்கு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமிரபரணி ஆறு மற்றும் அது உருவாகும் வனத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்ந்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்முறையில் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் முந்தைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி ஐந்து நாட்கள் வரை வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் தங்கும் குடில் அமைக்கும் பொருட்களை எடுத்து செல்ல 13-ஆம் தேதி காலை 11 மணி வரை மட்டும் பாபநாசம் சோதனை சாவடியில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படும். 13 ஆம் தேதி காலை 11 மணிக்கு மேல் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் காரணத்தினால் அரசு பேருந்து, தனியார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் பாபநாசம் சோதனை சாவடியில் அனுமதிக்கப்படமாட்டாது.
14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே திருக்கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் அகஸ்தியர் பட்டி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டுமே திருக்கோவிலுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது.
18ஆம் தேதி குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். தங்கும் குடில் பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு 18ஆம் தேதி காலை 6:00 மணி முதல் மாலை 3:00 மணி வரையிலும் 19ஆம் தேதி காலை 6 மணி முதல் காலை 11 மணி வரையிலும் பாபநாசம் திருக்கோவில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும். கீழே இறங்கும் பக்தர்களுக்காக அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்
19ஆம் தேதி காலை 11 மணிக்கு பிறகு 21ஆம் தேதி வரை தூய்மை பணிகள் மற்றும் திருக்கோவில் உழவார பணி காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 22ஆம் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி திருக்கோவிலுக்கு சென்று வரலாம்.
- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், கெமிக்கல் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள், மண்ணெண்ணெய், மாசு ஏற்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
- மது, குட்கா உள்ளிட்டவற்றை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
- கோவில் தவிர்த்த வனப்பகுதிக்குள்ளும், ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இல்லை.
- பொது இடங்களில் மலம் கழிக்காமல் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 200 கழிவறைகளை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.
மழைக்குறைவு காரணமாக நெருப்பு பாதிப்பு அல்லது திடீர் கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையோடும் பாதுகாப்போடும் வனத்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளின் அறிவுரையை தவறாமல் பின்பற்றியும் திருக்கோவிலுக்கு சென்று வர வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறைகளோடு ஒத்துழைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது