முண்டந்துறையில் மொபைல் ஆப் மூலம் புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி முகாம்.
முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் மொபைல் ஆப் மூலம் புலிகள் கணக்கெடுப்பு குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;
தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தான் மிகப்பெரியது. இங்கு உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
தற்போது முதன் முறையாக பிரத்யேக மொபைல் ஆப் மூலம் கணக்கெடுப்பு எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் மொபைல் ஆப் மூலம் புலிகள் கணக்கெடுப்பு எடுப்பது எப்படி என்பதற்காக பயிற்சி முகாம் நடைபெற்றது. அம்பாசமுத்திரம் கோட்ட வனத்துறை துணை இயக்குநர் செண்பகபிரியா தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து பயிற்சியாளர் லோகேஷ் மொபைல் ஆப் மூலம் கணக்கெடுப்பு எடுப்பது எப்படி என காணொளி மூலம் விளக்கினார்.
இதைத்தொடர்ந்து இந்த கணக்கெடுப்புக்காக 29 செல்போன்கள் வழங்கப்பட்டது. மேலும் முண்டந்துறை அருகே வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வனச்சரகர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்ப காவலர்கள் என சுமார் 150 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியா கூறுகையில், இதற்கு முன்பு கையால் அளவெடுத்து, காகிதத்தில் பதிவு செய்யும் முறையில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. தற்போது பிரத்யேக மொபைல் ஆப் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதுகுறித்த சிறப்பு பயிற்சி இன்று அளிக்கப்பட்டது. இதன்மூலம் வனவிலங்குகளின் நடமாட்டம், எச்சம், அடையாளங்கள் என அனைத்தையும் அரிய முடியும், நாள்தோறும் வனப்பகுதியில் நடக்கும் வன உயிரினங்கள், தாவரங்கள் குறித்த தகவல்களை கண்காணிக்க முடியும் என்று தெரிவித்தார்.