நெல்லை-தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் மரக்கன்று நடவுப்பணி துவக்கம்
சேரன்மகாதேவி தாமிரபரணி நதி கரையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை சார் ஆட்சியர் சிவா கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.;
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலை பகுதியில் தாமிரபரணி நதியானது தொடங்கி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கின்றது. தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் கோபாலசமுத்திரம் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கிராம உதயம் சார்பில் சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி மரக் கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இதில் கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார்.
கிராம உதயம் மேலாளர் மகேஷ்வரி, கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், சுமிதா, புவனேஷ்வரி மற்றும் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், உறுப்பினர்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.