அம்பாசமுத்திரம்: சாலை விரிவாக்க பணியால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அம்பாசமுத்திரத்தில் சாலை விரிவாக்க பணிக்காக ஆக்ரமிப்புகளை அகற்றி கழிவு நீரோடை அமைக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது.
அம்பாசமுத்திரத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக ஆக்ரமிப்புகளை அகற்றி கழிவு நீரோடை அமைக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பாசமுத்திரத்தில் வடக்கு ரத வீதி ஒரு வழி பாதையாக செயல்பட்டு வருகிறது. இந்தசாலை தற்போது குறுகி குண்டும் குழியுமாக உள்ளது. நெடுஞ்சாலை துறை, இந்த ரோட்டை அகலப் படுத்த முடிவு செய்தது. நில அளவீடு செய்ததில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஆக்ரமிப்புகள் கண்டறியப்பட்டது. அதனை அப்புறப்படுத்த ஆக்ரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில், அகற்றப்படாத ஆக்ரமிப்புகளை அகற்றி பணியை துவக்க நெடுஞ்சாலைதுறை அம்பாசமுத்திரம் உதவி கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர் தலைமையில் அத்துறையினர் நேற்று ஜே.சி.பி., வாகனத்துடன் வடக்கு ரத வீதிக்கு வந்தனர்.
அப்போது, அப்பகுதி மக்கள் ரோட்டின் இருபுறமும் வீட்டின் முன் பகுதியில் கழிவு நீரோடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி., பிரான்சிஸ் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில், ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. மாலை வரை இப் பணி நீடித்தது. இச்சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.