கடந்த ஒரு மாதமாக முடங்கிக்கிடக்கும் அம்பாசமுத்திரம் இ-சேவை மையம்
அம்பாசமுத்திரத்தில் கடந்த ஒரு மாதமாக இ சேவை மையம் செயல்படாமல் இருந்து வருவாதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழக அரசு பொதுமக்கள் மனு அளிக்க எவ்வித சிரமமின்றி அளிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்காக பல்வேறு இடங்களில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இ சேவை மூலம் பட்டா மாற்றுதல், ஜாதி சான்று பெறுதல், வாரிசு சான்று பெறுதல், ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அட்டை திருத்தம், குடும்ப அட்டை திருத்தம், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வருமானவரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், என்ன பல்வேறு வசதிகளை இதன் மூலம் பெற முடியும்.
மேலும் சமூக நலத்திட்டங்களான முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனால் இ சேவை மையம் தற்போது பல இடங்களில் இணையதள கோளாறு காரணமாக செயல்படாமல் உள்ளது.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ,அனைத்து பொது இ சேவை மையங்களும் கடந்து ஒரு மாத காலமாக செயல் இழந்து காணப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் வாரிசு சான்றிதழ் பிறப்பு இறப்பு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் எடுப்பதற்கு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
பொதுவாக வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்கள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் அரசு அலுவலகத்திற்கு நேரில் வந்து செல்ல வேண்டிய சிரமம் குறைப்பதற்காக தொடங்கப்பட்டதே இ சேவை மையம்.
குறிப்பாக ஜாதி சான்றிதழ் வருமானச் சான்றிதழ் குடும்ப உறுப்பினர்களுக்கு உண்டான சான்றிதழ் பிறப்பு இறப்பு சான்றிதழ் ஓய்வூதிய திட்டம் திருமணம் ஆகாத பெண்களுக்கு ஓய்வூதிய திட்டம் விதவை மறுமண பாதுகாப்பு திட்டத்திற்கு பதிவு செய்தல் வழங்கப்படும் கலப்பு திருமணச் சான்றிதழ் போன்றவற்றிற்கு இ-சேவை மூலம் பொதுமக்கள் பதிவு செய்வது வழக்கம்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வருவாய் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ சேவை மையம் மற்றும் அதன் ஒப்புதல் பெற்ற விக்கிரமசிங்கபுரம் கல்லிடைக்குறிச்சி வீரவநல்லூர் சேரன்மகாதேவி பகுதிகளில் உள்ள இ சேவை மையங்கள் கடந்த ஒரு மாத காலமாக முடங்கி நிலையில் தற்போது வரை சரி செய்யப்படாமல் காணப்படுகிறது.
எனவே இதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.