நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு; ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பாப்பாக்குடியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-08-23 15:27 GMT

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு செய்த ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யக்கோரி பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள தெற்கு சங்கன்திரடு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலர் கவிதா என்பவர் மத்திய அரசின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் முறைகேடு செய்வதாகவும், தனக்கு வேண்டிய உறவினர்களுக்கு மட்டுமே வேலை வழங்கி பாரபட்சம் காட்டுவதாகவும் ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் 6.5 லட்ச ரூபாய் கவிதா ஊழல் செய்திருப்பது சமூக தணிக்கையில் தெரிய வந்திருப்பதாகவும் ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே ஊராட்சி செயலர் கவிதாவை இடமாற்றம் செய்யக்கோரி சங்கன்திரடு ஊர் பொதுமக்கள் இன்று பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் தங்களின் 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டையினை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் திரும்ப ஒப்படைக்க முயன்றனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

இதையடுத்து ஒரு மாதத்தில் தங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயம் நூறு நாள் வேலை திட்ட அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைப்போம் என்று எச்சரித்து விட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பாப்பாகுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News