அம்பாசமுத்திரம் மணல் கடத்தல்: கேரள பிஷப் உட்பட 6 பேர் கைது

அம்பாசமுத்திரம் அருகே மணல் கடத்தல் வழக்கில் பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் உட்பட 6 பேரை சிபிசிஐடி போலீ ஸார் கைது செய்தனர்

Update: 2022-02-09 04:17 GMT

காட்சி படம் 

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில் எம்-சாண்ட் குவாரிக்காக அனுமதி பெற்ற இடத்தில், ஆற்று மணல் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்டு கேரளாவுக்கு த்துக்கு கடத்தப்பதுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக, அந்த நிலத்தின் உரிமையாளரான கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த   மனுவேல் ஜார்ஜ் என்பவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக, விசாரணை மேற்கொண்ட அப்போதைய சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீப் தயாள் ரூ.9.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த மணல் கடத்தல் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், அம்பாசமுத்திரம் பகுதியில் நிகழ்ந்த மணல் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை. எனவே, அந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த சிபிசிஐடி,  பத்தனம்திட்டா கிறிஸ்தவ டயோசீசன் பிஷப் சாமுவேல் ஏரேனியஸ் (69), பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல் (56), ஷாஜி தாமஸ் (58), ஜிஜோ ஜேம்ஸ் (37), ஜோஸ் சமகால (69), ஜோஸ் கலவியால் (53) ஆகிய 6 பேரையும் கைது செய்து திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களில் பிஷப் மற்றும் ஜோஸ் சமகால ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News