தேசிய தரவரிசை பட்டியலில் திருச்சி என்.ஐ.டி. தொடர்ந்து முதலிடம் பிடித்து சாதனை
தேசிய தரவரிசை பட்டியலில் திருச்சி என்.ஐ.டி. தொடர்ந்து 6-வது ஆண்டாக முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது.;
திருச்சி என்.ஐ.டி. இயக்குனர் மினிஷாஜி தாமஸ்
இந்திய அரசின் தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு அமைப்பு ( என்.ஐ.ஆர்.எப்) வெளியிட்டுள்ள "இந்திய தரவரிசை 2021"ல் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் ( என் ஐ டி திருச்சி) தொடர்ச்சியாக ஆறாவது வருடமாக மற்ற அனைத்து தேசிய தொழில்நுட்பக் கழகங்களுள் முதலிடத்தைத் தக்க வைத்து உள்ளது என அதன் இயக்குனர் மினிஷாஜி தாமஸ் கூறி உள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில் திருச்சி என்.ஐ .டி.இந்திய பொறியியல் கல்லூரிகளுள் ஒன்பதாம் இடத்தைத் தக்க வைப்பதுடன், இவ்வருடத்தில் மொத்த மதிப்பெண்ணாக 66.08 பெற்று, சென்ற வருடத்தின் மதிப்பெண்ணான 64.10 விட நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.ஆராய்ச்சி மற்றும் தொழில்முறைக் காரணிகளில், விண்ணப்ப எண்ணிக்கை மற்றும் வெளியீடுகளின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அறிவுசார் சொத்து உரிமைகள் மற்றும் காப்புரிமைகளை பதிவு செய்தல் போன்றவற்றுக்குக் கல்லூரி தரப்பில் இருந்து தரப்பட்ட ஊக்கம் உத்வேகமாக இருந்தது. புதிய திட்டங்கள் சமர்பித்தல் மற்றும் மானியங்கள் பெறுதல், ஆலோசனை மற்றும் கல்வித் திட்டங்களை தொடர்ந்தது வலு சேர்த்தன. பட்டப்படிப்பு விளைவுகளில், வேலை வாய்ப்புகளும், பட்டதாரிகளின் சராசரி சம்பளமும் அதிகரித்துள்ளன மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார்.
முதல் எட்டு இடங்களில் மிகப் பழம் பெருமை வாய்ந்த இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டி) உள்ள நிலையில் , பல ஐ.ஐ.டி கள், சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைப் பின்னுக்குத் தள்ளி, அனைத்து இந்தியப் பொறியியல் கல்லூரிகளிலும் ஒன்பதாம் இடம் என்ற மிகச் சிறப்பான சாதனையினை என்.ஐ.டி திருச்சி செய்துள்ளது. ஒட்டுமொத்த தரவரிசையில் 24 இல் இருந்து 23 க்கு முன்னேறி, இந்தியாவின் முதல் 25 கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளது.
என்.ஐ.டி திருச்சி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளதற்காக பேராசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் தொடர்ந்த ஆதரவுக்காகவும் பங்களிப்புக்காகவும் அதன் இயக்குனர் மினிஷாஜி தாமஸ் நன்றி தெரிவித்து உள்ளார்.