தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பு காரணமாக,தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.