அமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவம் பாஜக சித்தாந்தத்திற்கு எதிரானது: அண்ணாமலை
தவறு யார் செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யட்டும். மேலும் கட்சி தொண்டர்கள் எதற்கும் உணர்ச்சிவசப்பட வேண்டாம் எனவும் கூறினார்;
ராமேஸ்வரத்தில் மீனவர்களுடன் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாட ராமநாதபுரம் வந்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக எப்போது அமைதியை விரும்பக்கூடிய கட்சி, கலவரத்தை விரும்பக்கூடிய கட்சி கிடையாது. அதேநேரத்தில் நேற்று அமைச்சர் பொதுமக்களிடம் பேசிய வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே போல அமைச்சரின் கார் மீது காலணியை வீசிய சம்பவமும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதை தொடர்ந்து மதுரை மாவட்ட பாஜக தலைவர் தன் தாய் கழகத்திற்க்கு செல்வதாக கூறியது அவர் உரிமை, அதை யாராலும் தடுக்க முடியாது. அவர் சென்றால் மற்றொருவர் அப்பதவிக்கு அமர்த்தப்படுவார்.
மேலும் இச்சம்பவம் நேற்று நடந்திருக்க கூடாது. ஒருவேளை நான் அரைமணி நேரம் முன்னாடி சென்றிருந்தால் இதை தடுத்திருக்கலாம். அதற்குள் சண்டையெல்லாம் முடிந்து விட்டது.
நேற்று நடந்த இச்சம்பவம் கட்சியின் அடிப்படை சித்தாந்தத்திற்கு எதிரானது. அதே நேரத்தில் காவல்துறை கைது செய்துள்ள நபர்களில் சில அப்பாவிகள் உள்ளனர். தவறு யார் செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யட்டும். மேலும் கட்சி தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என கூறினார்.