கோவையில் ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

கோவையில் சூறாவளி காற்றில் ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

Update: 2023-06-01 13:02 GMT

கோவை அருகே இன்று ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டியில் ஒரு தனியார் தோட்டத்தில் ராட்சத விளம்பர பேனர்கள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதற்காக சுமார் 80 அடி உயரத்தில் இரும்பு குழாய்கள் மற்றும் இரும்பு தூண்கள் கொண்டு விளம்பர பேனர்கள் அமைக்கும் பணியில் சேலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் கோவையில் திடீரென சூறாவளி காற்று வீசியது . சூறைக்காற்று வீசியதால் இரும்பு கம்பிகள் மற்றும் விளம்பர பேனர்கள் சரிந்து விழுந்தன. இதில் அந்த பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விளம்பர பேனர்களை அமைத்தது யார்? எந்த நிறுவனத்திற்காக இது அமைக்கப்பட்டது, இறந்த தொழிலாளர்களின் குடும்ப விவரங்கள் பற்றி போலீசார் தகவல் சேகரித்து வருகிறார்கள்.

இந்த விபத்து காரணமாக கோவை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த சாலையில் வேடிக்கை பார்ப்பதற்காக ஏரளமானவர்கள் வாகனங்களுடன் கூடி நின்றனர். போலீசார் தலையிட்டு வாகனப் போக்குவரத்தினை சரி செய்தனர்.

Tags:    

Similar News