தமிழக கேரள எல்லையில் பறிபோகும் தமிழக விவசாய நிலங்கள்
Kerala Tamilnadu Border -கேரள அரசு தன்னிச்சையாக 'டிஜிட்டல் ரீ-சர்வே' காரணமாக தமிழக எல்லையில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது;
தேவாரம் கிராமத்தின் கீழ் உள்ள நிலத்தை டிஜிட்டல் முறையில் மறு ஆய்வு செய்த பிறகு கேரள அரசு அந்த இடம் தங்கள் மாநிலத்துக்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
Kerala Tamilnadu Border -டிஜிட்டல் ரீ சர்வே என்கிற மோசடியை கேரள மாநில அரசு கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி மாநிலம் முழுவதும் தொடங்கியது. தமிழக கேரள எல்லையை அளவிட்டு வரையறை செய்யாமல், ஒருதலைப் பட்சமாக கேரள மாநில அரசு நடத்தும் இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால்,தமிழகம் கிட்டத்தட்ட 1000 சதுர கிலோமீட்டரிலிருந்து 1400 சதுர கிலோமீட்டர் வரையிலான பரப்பை கேரளாவிடம் இழக்கும் அபாயம் உள்ளது.
தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கடிதம் மூலமாக தகவல் தெரிவித்தும், பெரிய அளவிலான விழிப்புணர்வு தமிழகத்தில் ஏற்படவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.
எல்லையோரத்தில் தேவாரம் கிராம வருவாய் நிலமாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை கூட, டிஜிட்டல் ரீ சர்வே கும்பல், இது கேரள மாநிலத்திற்கு சொந்தமானது என்கிற போர்டுகளை வைக்கும் நிலைமையையும் தொடர்ந்து எழுதி வருகிறோம்.
எல்லையோர நிலங்களை காக்க வேண்டும் என்கிற முனைப்பை தமிழக அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்கிற எங்களுடைய ஆதங்கம் எப்போது நிறைவேற போகிறது என்று தெரியவில்லை.
இந்நிலையில் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் டிஜிட்டல் ரீ சர்வே செய்யும் இடங்களை அரசு அறிவித்திருக்கிறது.
அதன்படி திருவனந்தபுரம் மாவட்டத்தில் 22 இடங்கள்
கொல்லம் 12 இடங்கள்
பத்தினம்திட்டா 12 இடங்கள்
கோட்டயம் 9 இடங்கள்
ஆலப்புழா 8 இடங்கள்
இடுக்கி 13 இடங்கள்
எர்ணாகுளம் 13 இடங்கள்
திருச்சூர் 23 இடங்கள்
பாலக்காடு 14 இடங்கள்
மலப்புரம் 18 இடங்கள்
கோழிக்கோடு 16 இடங்கள்
வயநாடு 8 இடங்கள்
கண்ணூர் 14 இடங்கள்
காசர்கோடு 18 இடங்கள் என அளவீடு தொடங்கியுள்ளது.
இவற்றில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்று தாலுகாக்களான கட்டக்கடை, நெய்யாற்றின் கரை, நெடுமங்காடு ஆகிய மூன்று தாலுகாக்களிலும் அளவீடு தொடங்கியுள்ளது. தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையே எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்த மூன்று தாலுகாக்களிலும் இரு மாநில எல்லைகளை அளக்க வேண்டும் என்று நாம் கொடுத்த குரல் கிணற்றில் போட்ட கல்லாகி கிடக்கிறது.
இதுபோல் கொல்லம் மாவட்டத்தில் உள்ள புனலூர் தாலுகாவிலும் அளவீடு தொடங்கி இருக்கிறது. தமிழக எல்லையோரம் இருக்கும் ஆரியங்காவு வனப்பகுதிகள் யாருக்கு சொந்தம் என்று இறுதி அளவீடு செய்யப்படாத நிலையில், எந்த அடிப்படையில் இந்த தாலுகாவில் டிஜிட்டல் ரீ சர்வேயை கேரளா தொடங்கியது என்று தெரியவில்லை.
அதுபோல் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கோணி தாலுகாவிலும் ரீ சர்வே கும்பல் அளவீட்டை தொடங்கியிருக்கிறது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருந்த செண்பகவல்லி கால்வாய், இந்த தாலுகாவில் தான் இருக்கிறது.
அதுபோல இடுக்கி மாவட்டத்தில் 13 இடங்களில் ரீ சர்வேயை தொடங்கி இருக்கும் மோசடி கும்பலால், தேவிகுளம் பீர்மேடு உடுமஞ்சோலை தாலுகாக்களில் மிகப்பெரிய வனப்பகுதி, கேரளாவிற்கு சென்று சேரும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
திருச்சூர் மாவட்டம் சாலக்குடி முதல் வால்பாறை வரையிலான வனச்சாலையை அளவீடு செய்வதற்கான வேலை தொடங்கி இருக்கிறது. இந்தச் சாலையில் குறிக்கிடும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வரை தமிழக எல்லை இருக்கும் நிலையில், கோவை மாவட்ட நிர்வாகம் அமைதி காப்பதால் ரீ சர்வே கும்பல் தான்தோன்றித்தனமாக அளவீடு செய்யத் தொடங்கி இருக்கிறது.
அதுபோல் பாலக்காடு மாவட்டத்தின் பாலக்காடு தாலுகா, சித்தூர் மற்றும் மன்னார்காடு தாலுகாக்களிலும் மொத்தமாக 14 இடங்களில் ரீ சர்வேயை தொடங்கி இருக்கிறார்கள். பாலக்காடு மாவட்டத்தின் கொழிஞ்சாம்பாறை பகுதிகளை தமிழகம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், தேவை உடனடி நடவடிக்கை.
அதுபோல் நீலகிரி மாவட்டத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் மலப்புரம் மாவட்டத்தின் நிலம்பூர் தாலுகாவிலும் அளவீடு தொடங்கி இருக்கிறது. நில மதிப்பு கூடுதலாக இருக்கும் நிலம்பூர் எல்லையோர பகுதி முறையாக அளவீடு செய்யப்படாமல் அளக்கப்படுமானால், பல கோடி மதிப்பிலான நிலங்களை தமிழகம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அதுபோல் நீலகிரி மாவட்டத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் வயநாடு மாவட்டத்தில் உள்ள, வைத்ரி, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி ஆகிய மூன்று தாலுகாக்களிலும், எட்டு இடங்களில் ரீ சர்வேயை தொடங்கி இருக்கிறார்கள்.
தமிழக அரசு விழித்துக் கொள்ளாவிட்டால் மதிப்பு மிக்க நிலங்கள் கேரளாவிற்கு சென்று சேரும். ரீ சர்வே குழுவினருடன் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களும் அணிவகுத்து களத்தில் நிற்பதால், தமிழகம் மிகப் பெரிய அளவிலான நிலப்பரப்பை இழக்க கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகம் விழித்துக் கொள்ளப் போவது எப்போது? எல்லையோரத்தில் இருக்கும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைதி காப்பது ஏன்...? மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மௌனம் கலைப்பது எப்போது...?
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2