அவினாசியில் இன்று தொடங்கும் அண்ணாமலையின் 3-ம் கட்ட நடைபயணம்
என் மண் என் மக்கள் நடைபயணத்தின் 3-ம் கட்டத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று அண்ணாமலை தொடங்குகிறார்
பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச்செல்லும் நோக்கில் 'என் மண் என் மக்கள்' என்ற நடைபயணத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
இரண்டு கட்ட நடைபயணத்தை முடித்த அவர் 3-ம் கட்ட நடைபயணத்தை கடந்த 6ம் தேதி தொடங்க இருந்தார். ஆனால் அண்ணாமலையின் டெல்லி பயணம் மற்றும் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது உடல்நலம் சரியானதை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட 3-ம் கட்ட நடைபயணத்தை அண்ணாமலை மீண்டும் இன்று (திங்கட்கிழமை) திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தொடங்குகிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழாவில் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் 3 நாள் நடைபயண நிகழ்ச்சி நடக்கிறது. 19ம் தேதி பல்லடம் தொகுதியிலும், 20ம் தேதி திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். அவினாசியில் இன்று பாஜக தலைவர் அண்ணாமலை 3-ம் கட்ட நடைபயணம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் செய்துள்ளனர்.