அதிமுக அலுவலக பொருட்களை திரும்ப ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-05-04 13:22 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது தொடர்பாக எழுந்த பிரச்னையில் தற்போதைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி வானகரம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அப்போது, பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டை அ.தி.மு.க., அலுவலகம் சென்றபோது, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக மாறியது. அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சொத்து ஆவணங்கள், வாகனங்களின் ஆர்.சி புத்தகங்கள், கம்ப்யூட்டர் உள்பட பல பொருட்களை பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்று விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த கலவரம் தொடர்பான வழக்குகளை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்போது, அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை போலீசாரிடம் பன்னீர்செல்வம் தரப்பினர் ஒப்படைத்தனர். அந்த பொருட்கள் எல்லாம் தற்போது சென்னை சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ளன.

அந்த பொருட்களை எல்லாம் ஒப்படைக்கக் கேட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி. சண்முகம், சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி இளந்திரையன் அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச்  செல்லப்பட்ட பொருட்களை மனுதாரர் சிவி சண்முகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags:    

Similar News