அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை: வழக்கை முடித்தது மதுரை ஐகோர்ட்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை இல்லை என உத்தரவிட்டு வழக்கை மதுரை ஐகோர்ட்டு முடித்து வைத்துள்ளது.

Update: 2024-01-12 13:19 GMT

மதுரை ஐகோர்ட்டு கிளை (கோப்பு படம்).

அவனியாபுரத்தில் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற யாரும் தடை செய்யக்கூடாது அப்படி தடை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மூன்று நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அவனியாபுரத்தில் தை 1ஆம் தேதி அதாவது ஜனவரி 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் ஒன்றை செய்தனர்.

அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதனால் அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து ஒரு கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து சமாதான கூட்டம் நடத்தி அனைவரின் கருத்தை கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட சமாதானக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டை நடத்துவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை என கூறியதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மனு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வருடமும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த எந்த தடையும் இல்லை எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

போட்டியின் போது தனி நபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ பிரச்சனை அல்லது இடையூறு செய்யக்கூடாது, அதை மீறி செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

Similar News