கோவில் திருவிழாக்கள் கொண்டாடப்பட வேண்டும் - பாஜக தலைவர் எல்.முருகன்.

கொரோனா மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கோவில் திருவிழாக்கள் கொண்டாடப்பட வேண்டும் என பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

Update: 2021-04-17 02:15 GMT

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் தாயார் வள்ளியம்மாள் (90) கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் வருகை தந்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்றிரவு துணை முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்திற்கு வருகை தந்த எல்.முருகன், ஓ.பி.எஸ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார். இதில் ஓ.பி.எஸ், அவரது மனைவி விஜயலட்சுமி, மற்றும் மகன் தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர்களும் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஏனெனில் பெண்களின் வாக்குப்பதிவு இன்றைக்கு அதிகளவில் பதிவாகியுள்ளது. காலம் காலமாக பெண்கள் அதிகம் வாக்களிப்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் மோடிஜி ஆகியோர்களுக்கு. அந்த வகையில் தற்போது பெண்களின் வாக்குகள் அதிமுகவிற்கு கிடைத்திருப்பதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன எனக் கூறினார்.

மேலும் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் நூறு சதவீதம் வெற்றி அடையும் எனவும், தோல்வி பயத்தாலே வாக்குப்பெட்டிகள் மாற்றப்படுவதாக திமுக குற்றம் சாட்டிவருவதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜகவினரை தாக்கியது, அரக்கோணம் விவகாரம் போன்ற சம்பவங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜாதி அரசியலை முன்னெடுத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையைப் பொறுத்து ஊரங்கு அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்றார். மேலும் கோவில் திருவிழாக்கள் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று, எனவே சட்டவிதிகளுக்கு உட்பட்டும், கொரோனா விதிகளுக்கு உட்பட்டும் கோவில்களில் திருவிழாக்கள் கொண்டாடப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News