தேனி அருகே உள்ள பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடியை மாற்றியதால் ஊராட்சிப் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி அருகே உள்ள பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ள மேற்குத் தெருவில் சுமார் 1300 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் இது வரை வாக்களித்து வந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடியை இரண்டாக பிரிக்கப்பட்டதில், இப்பகுதியில் இருந்த 209வது வாக்குச்சாவடியை 209, 209A என பிரித்து அதே பகுதியில் காலனியில் உள்ள அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு வாக்குச் சாவடியை மாற்றியது குறித்து முறையான அறிவிப்பு ஏதும் அளிக்கவில்லை எனக் கூறி இன்று வாக்களிக்க வந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்தலை புறக்கணித்து அதே பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாக்குச்சாவடியை மீண்டும் தங்களது பகுதிக்கு கொண்டுவரும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் எனக் கூறி அதே பகுதியில் குவிந்தனர்.அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.வாக்குச்சாவடி பிரிக்கப்பட்டது குறித்து முறையான தகவல்களை தேர்தல் ஆணையம் தெரிவிக்காததால் புதிதாக அமைக்கப்பட்ட இரு வாக்குச்சாவடிகளில் 200 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.